×

சிக்கண்ணா அரசு கல்லூரியில் உடலுறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர், ஆக.6: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில், கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் உடலுறுப்பு தான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாநகராட்சி நடமாடும் மருத்துவ பிரிவு, மூத்த உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் கலைச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது: உயிர்களைக் காப்பதில் உறுப்பு தானம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது.உடல் உறுப்புகள் செயலிழப்பால் அவதிப்படுபவர்களுக்கு உடல் உறுப்பு தானம் புது வாழ்வு அளிக்கிறது. ஒருவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வரும்போது அவர் 8 உயிர்களை காப்பாற்ற முடியும்.

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துக்களை மக்களுக்கு உணர்த்தவும் ஒவ்வொரு ஆண்டும் உலக உடலுறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு உடல் உறுப்பு தானம் செய்வதற்கான விண்ணப்பப் படிவம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, ஜெயசந்திரன், மதுகார்த்திக், செர்லின், சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும், உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

The post சிக்கண்ணா அரசு கல்லூரியில் உடலுறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chikkanna Government College ,Tirupur ,Tirupur Government Art College ,Chikkanna National Welfare Project Unit ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...